ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் | online rummy apps

செய்திப்பிரிவு

Published : 11 Jan 2021 03:24 am

Updated : 11 Jan 2021 07:25 am

 

Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 07:25 AM

online-rummy-apps

சென்னை

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை தடை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் தொடர்ந்து இயங்கி வரும் சூதாட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்தவர்களில் பலர் தற்கொலை செய்தனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த 5 மாதத்தில் 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்தும், அதில் விளையாடுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை அளிக்கும் விதத்திலும்தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது.

இருப்பினும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் முன்பு போலவே இப்போதும் செயல்பாட்டில்தான் உள்ளன. இணையதளங்கள் மற்றும் செயலிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றை முழுமையாக தடுக்க வேண்டுமானால் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தர தீர்வு எடுக்கும் முடிவு மத்திய அரசிடம்தான் உள்ளது.

ஆனால், ஆன்லைன் சூதாட்டஇணையதளங்களை தமிழகத்துக்குள் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம். தற்போதையை சட்டம் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் ஆன்லைனில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர்.

இரு நாட்களுக்கு முன்பு கூட கோவையை சேர்ந்த பிரடரிக்என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி கண் முன்பே பலர்இறந்தும், ஆன்லைன் சூதாட்டத்தால்தான் அவர்கள் இறந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை,ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஒரு ஆன்லைன் இணையதளம் மீது கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இதுவரை முன்வரவில்லை. சூதாட்டத்தால் இறந்தவர்களின் வழக்குகள் அனைத்தும் தற்கொலை வழக்குகளாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு காரணமான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவாகவில்லை. அரசு சட்டம் இயற்றினாலும், அதை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் காவல் துறை, செயல்படாமல் இருப்பதால், இந்த சட்டம் இயற்றப்பட்டும் வீண்தான் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை