மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைப் பார்க்க, ராகுல்காந்தி நாளை மறுநாள் (ஜனவரி 14) மதுரை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, காங்கிரஸார் ஏற்பாடு செய்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிக்கையையொட்டி தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழா மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் அடுத் தடுத்த நாட்களில் நடப்பது வழக்கம்.
இவ்வாண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (ஜன., 14) பொங்கல் தினத்தன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண திட்டமிட்ட அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் அவனியாபுரம் வருகிறார்.
டெல்லியில் இருந்து நேரடி விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவர், கார் மூலம் ஜல்லிக்கட்டு திடலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 2 மணி நேரம் பார்வையாளர் கேலரியில் அமர்ந்து வாடிவாசலில் துள்ளிக் குதிக்கும் காளைகள் மற்றும் அடக்கும் காளையர்களின் விளையாட்டைக் கண்டுகளிக்க உள்ளார்.
இதன்பின், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘தமிழர் பாரம்பரியம் , பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில், எங்களது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மதுரை வருகிறார். அவருக்கு மதுரை மாநகர் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில், 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், விமான நிலையத்தில் இருந்து மதுரை நகர் தெற்கு வாசல் வழியாக அவர் வந்து செல்லும் வகையிலும் போலீஸிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி பொறுத்து நகருக்குள் அழைத்து வருவது குறித்து திட்டமிடுவோம்,’’ என்றார்.