அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால் நடும் விழா; சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார்கள் பரிசு: முதல்வர், துணை முதல்வர் பெயரில் வழங்கப்படும் என ஆர்.பி. உதயகுமார் தகவல் | jallikkattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு பிடி வீரராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு முதல்வர் பெயரிலும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் பெயரிலும் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜன.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக் கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முகூர்த்தக்கால் நட்டார். சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையிலான ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜன.16-ல் தொடங்கி வைக்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தேர்வு செய்யப்படும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிசாமி பெயரில் ஒரு காரும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு தடுப்பு வேலிகள் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பார்வையாளர்களின் இருக்கைகள் தனிமனித இடைவெளியுடன் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நன்றி இந்து தமிழ் திசை