அரூர் அருகே கிராம மக்கள் முயற்சியால் வறண்டு கிடந்த ஏரிக்கு அனுப்படும் தண்ணீர்: நிரந்தர தீர்வு காண அரசுக்கு கோரிக்கை | Request to Government

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிராம மக்களின் முயற்சியால், வரண்டு கிடந்த ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

அரூர் வட்டத்தில் உள்ளது கொளகம்பட்டி ஊராட்சி. இங்குள்ள வரட்டனேரி 71 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வழிப்பாதை இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக வறண்ட ஏரியாகவே காட்சியளித்தது. இந்நிலையில், கிராம மக்களின் முயற்சியால் இந்த ஏரியை தண்ணீரால் நிறைக்கும் பணி நடந்து வருகிறது. வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொளகம்பட்டி அருகிலுள்ள கல்ஒட்டு தடுப்பு அணைக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளது.

கல் ஒட்டு தடுப்பு அணையில் இருந்து எருக்கம்பட்டி சுடுகாடு வழியாக அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டி சிறிய கிணறு ஒன்றை கொளகம்பட்டி பகுதி மக்கள் தோண்டியுள்ளனர். இந்த கிணற்றில் இருந்து 20 ஹெச்.பி அளவு மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலமும், மீதமுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக சிறிய வாய்க்கால் அமைத்தும் வரட்டனேரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கொளகம்பட்டி கிராம மக்கள் கூறும்போது, ‘வரட்டனேரிக்கு தண்ணீர் நிரப்பக் கோரி சுமார் 30 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், தமிழக அரசுக்கும் என பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இந்நிலையில், கிராம மக்கள் இணைந்து ரூ.3 லட்சம் நிதி திரட்டினோம். அந்த நிதி மற்றும் கிராம மக்களின் உழைப்பு மூலம் தற்போது மோட்டார் அமைத்து வரட்டனேரிக்கு தண்ணீர் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த ஏரி நிறைந்தால் அதைச் சுற்றியுள்ள கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி புதூர், தொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் விவசாய நிலம் செழிப்படையும்.

குடிநீர் பிரச்சினையும் தீரும். எதிர் காலத்திலாவது, கல் ஒட்டு தடுப்பணை உயரத்தை அதிகரித்து, வரட்டனேரிக்கு தண்ணீர் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரூர் பெரிய ஏரிக்கும் தண்ணீர் அனுப்ப முடியும். இவ்வாறு அரூர் பெரிய ஏரி நிறைக்கப்பட்டால் அரூர் நகரத்தின் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீரும்’ என்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை