அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ,2,500 ரொக்கம், பொங்கல் தொகுப்பை ஜன. 25-ம் தேதி வரை பெறலாம்: உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் அறிவிப்பு | pongal parisu

தமிழகத்தில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் ஜனவரி 25-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2.10 கோடிக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

அதன்பிறகு, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில்,2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,923 இலங்கை தமிழர்கள் என 2.10 கோடி பேருக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.5,604.84 கோடிநிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு ரொக்கம் மற்றும் தொகுப்பு விநியோகம் தொடங்கியது. இந்தபரிசுத் தொகுப்பு தினமும் 200குடும்ப அட்டைகள் என்ற அடிப்படையில் ஜனவரி 12-ம் தேதி (இன்று) வரை வழங்கப்படும். விடுபட்டவர்கள் 13-ம் தேதி (நாளை) பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கலுக்காக வெளியூர் செல்பவர்கள், கரோனா பரவல் காரணமாக வெளியூரில் தங்கியிருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விடுபடாமல் கிடைக்கும் வகையில் இதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள், சென்னை உணவு வழங்கல் துணை ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் ரா சவான் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வழங்க ஏதுவாக, ஜனவரி18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகிக்கப்பட வேண்டும். பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கும் பொங்கல் துணிப்பை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை