அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறை: அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக 2-வது முறையாக பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றம் | US House impeaches President Donald Trump for incitement of insurrection at Capitol

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி கலவரம் செய்த சம்பவத்தின் எதிரொலியாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் 2-வது முறையாக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரில் 197 பேர் வாக்களித்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அதிபர் மீது 2-வது முறையாக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் தனது யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டரில் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிடும் பேசியதன் காரணமாகவே நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு பெரும் கலவரம் நடந்தது. இதில் போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைக் கண்டித்து பிரதிநிதிகள் சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்துக்கு அதிபர் ட்ரம்ப் சார்ந்துள்ள குடியுரசுக் கட்சியின் எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரில் 197 பேர் வாக்களித்தனர்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.பி.க்களான அமி பேரா, ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை.

பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பதவிநீக்கத் தீர்மானம் இனிமேல் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால், செனட் சபை 19-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். ஆதலால், செனட் அவையில் இது விவாதிக்க வேண்டியது இருக்காது .

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறுகையில் “ நம்முடைய தேசத்துக்கு எதிராகவே அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஆதலால், அதிபர் ட்ரம்ப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தேசத்துக்கு ஆபத்தானவர் ட்ரம்ப், அவர் வெளியேற்றப்பட வேண்டும். அதிபர் தேர்தல் நடந்ததில் இருந்து, நிலுவையில் உள்ள தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார், ஆனால், தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பொய்களைக் கூறி நம்பவைத்தார். அரசியலமைப்புச்சட்டத்துக்கு மாறாக அதிகாரிகளை நடக்குமாறு வற்புறுத்துகிறா. இறுதியாக அவரின் பேச்சால் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என அனைவரும் உணர்ந்தோம்.

ஆதலால், அதிபர் ட்ரம்ப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதிநிதிகள் சபையிலிருந்து தீர்மானம், செனட் அவைக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்தார்.

நன்றி இந்து தமிழ் திசை