
அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டோல் கட்டிடத்தில் 2,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறும் போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்தக் கட்டிடத்தை முற்றுகையிட கூடும் என்று முன்கூட்டியே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டோல் கட்டிடத்தை திடீரென முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் எளிதாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
கேபிட்டோல் கட்டிடத்தில் உள்ள முக்கிய அலுவலங்களை ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் செனட் அவைக்குள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி செனட் எம்.பி.க்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிலைமை மோசமானதால் துணை அதிபர் மைக் பென்ஸ் உத்தரவின்பேரில், ஆயுதம் ஏந்திய 1,100 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிடத்துக்குள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கேபிட்டோல் போலீஸாரும் இணைந்து கும்பலை போராடி கட்டுப்படுத்தினர். எனினும் வன்முறை கும்பலை கட்டுப்படுத்த மிக, மிக தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாரபட்ச நடவடிக்கை
எம்எஸ்என்பிசி நிருபர் ஜோ கூறும்போது,“கருப்பின மக்கள், சிறுபான்மையின மக்கள் சாதாரண போராட்டம் நடத்தினால் கூட பல அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் என்பதால் கேபிட்டோல் கட்டிட வளாகம் எவ்வித எதிர்ப்பும் இன்றி திறக்கப்படுகிறது. தீவிரவாதிகள் வந்தால் அவர்களுக்கும் இவ்வாறு கதவுகள் திறக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.