அமித் ஷா சென்னை வருகையின்போது விதிமீறல் பேனர்: டிராபிக் ராமசாமி வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்  | Irregular banner during Amit Shah’s visit: Tropic Ramasamy case dismissed by High Court

அமித் ஷாவின் சென்னை வருகையின்போது விதியை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை அரசியல் காரணம் உள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்று சென்னை முழுவதும் விதிகளை மீறி பேனர்கள் வைத்தவர்கள் மீதும், விதிமுறைகளை மீறி ஒன்று கூடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், காவல்துறையிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புகார் அளித்திருந்தார்.

அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குப் பொதுநல நோக்குடன் தொடரப்பட்டதாகத் தெரியவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நன்றி இந்து தமிழ் திசை