அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் மத்திய பாஜக அரசு பாதுகாத்து வருகிறது. சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (10.1.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும், அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மக்கள் விரோத அதிமுக ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுகிற அளவில், ஒரு மக்கள் விரோத ஆட்சியை அதிமுக தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழக மக்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், சேலம் 8 வழிச் சாலைத் திட்டம், மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவது, நியுட்ரினோ திட்டம், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்கள், இந்தி மொழி திணிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பல்வேறு அநீதிகள் தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அதிமுகவே ஓர் ஊழல் கட்சி. முதல்வராக இருந்தபோதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதல் குற்றவாளியான ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றமும் அவர்களுக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதன்படி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
இப்படி அந்தக் கட்சியே ஊழல் கட்சியாக இருக்கிறது. ஜெயலலிதா நிரபராதி, சசிகலா குற்றவாளி என்ற வாதத்தை நீதிமன்றமும் ஏற்காது, சட்டமும் ஏற்காது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், ஊழல் செய்வதையே நோக்கமாகக் கொண்டுதான் அதிமுக ஆட்சியே நடக்கிறது. நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளியை தமது சம்பந்தி பி. சுப்ரமணியத்துக்கு வழங்கியதில், அதிகார துஷ்பிரயோகமும், ரூ.3,500 கோடி அளவுக்கு முறைகேடும் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்தத் தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. தடையை அகற்ற சிபிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தடை உத்தரவை வைத்துக் கொண்டு அதிமுகவை பாஜக மிரட்டி வருகிறது.
தடை உத்தரவை நீக்கிய அடுத்த நிமிடம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியாது. இந்த வழக்கைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி பாஜக அரசியல் பேரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
முதல்வர் பழனிசாமியைத் தவிர, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டிலும் சிபிஐ விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கவும், 3 தமிழக அமைச்சர்கள் மீது விசாரணையைத் தொடரவும் ஜனவரி மாதத்திற்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.