அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்த கலவரைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சேனல் அடுத்த 7 நாட்களுக்கு எந்தவிதமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய யூடியூப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதேபோல அதிபர் ட்ரம்ப்பின் ஸ்நாப்சாட் கணக்குகளை நிரந்தரமாக முடக்கி அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கெனவே ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள், ட்ரம்பின் கணக்குகளை நிரந்தரமாக ரத்து செய்துள்ள நிலையில் தற்போது ஸ்நாப்சாட் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக யூடியூப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “ அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, அதைத் தொடர்ந்து எழுந்த கவலைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து, அதிபர் ட்ரம்ப்பின் சேனல் எந்தவிதமான வீடியோக்களையும் அடுத்த 7 நாட்களுக்கு பதிவேற்றம்செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ட்ரம்ப் சேனல் எங்கள் கொள்கைக்கு விரோதமாக வன்முறையைத் தூண்டுவகையில் பேசிய வீடியோக்களையும் நீக்கியுள்ளோம். ட்ரம்ப் சேனலில் யாரும் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்காதவகையில் கருத்து தெரிவிக்கும்பகுதியும் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது” .இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப்பின் யூடியூப் சேனலுக்கு 27 லட்சம் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்நாப்சாட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “ கடந்த சில மாதங்களாகவே ட்ரம்பின் பல்வேறு விதிமுறைகளை தொடர்ந்து மீறினார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து ட்ரம்பின் ஸ்நாப்சாட் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்பட்டன. ஆனால், ஸ்நாப்சாட்டின் எதிர்கால நலன், அதன் பார்வையாளர்கள் நலன் ஆகியவற்றைக் கருதி, ஸ்நாப்சாட்டுக்கு அதிபர் ட்ரம்புக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.