அதிகாரிகள் செய்யும் பாவம்; சிலுவை சுமக்க நீதித்துறை இயேசு கிறிஸ்து அல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி | The judiciary is not Jesus Christ to bear the cross for the sin committed by the authorities: the High Court dissatisfied

நில ஆர்ஜித வழக்கில் நிலத்தின் சொந்தக்காரரிடம் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டும் 20 ஆண்டுகள் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அதிகாரிகள் செய்யும் பாவத்திற்கு சிலுவை சுமக்க நீதித்துறை ஒன்றும் இயேசு நாதர் அல்ல என கருத்து தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டி என்னுமிடத்தில் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம், அரசுத் திட்டத்திற்காக 1988-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ரத்தினம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் ஆர்ஜிதம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாக எந்த மேல் முறையீடும் செய்யப்படவில்லை. கையகப்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணையும் வெளியிடப்படவில்லை. அதேபோல, நிலத்தை ரத்தினம் பெயருக்கு மீண்டும் பெயர் மாற்றம் செய்தும் கொடுக்கவில்லை.இதையடுத்து, நிலத்தை தனது பெயருக்கு மீண்டும் மாற்றம் செய்து தரக் கோரி ரத்தினம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக மனுதாரர் பல மனுக்களை அளித்தும் அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட ரத்தினத்திற்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டார்.

இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் எனத் தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் செய்த பாவத்திற்காக சிலுவை சுமக்க நீதித்துறை, இயேசு கிறிஸ்து அல்ல எனவும் குறிப்பிட்டார்.

இதேபோல, 10 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து தரவில்லை என வழக்கு தாக்கல் செய்திருந்த பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை